சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவை விட படு வேகமாக தயாராகத் தொடங்கியுள்ளது அதிமுக. அதிமுக கூட்டணியில் புதிய கட்சியாக முதல் ஆளாக புதிய தமிழகம் வந்து சேர்ந்துள்ளது.
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவருடன், புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண், அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர், மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ராமராஜ், வி.சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து போட்டியிடுவது குறித்து இந்த சந்திப்பின்போது ஜெயலலிதாவுடன் விவாதித்தோம். எங்களின் கருத்துகளை ஜெயலலிதா ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
புதிய தமிழகம் கட்சி எத்தனை சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்பட கூட்டணி தொடர்பான பிற விஷயங்கள் பற்றி பின்னர் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளின்போது விரிவாக விவாதிக்கப்படும் என்றார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்கு வங்கி உள்ள கட்சி புதிய தமிழகம். தலித்களின் பிரதிநிதியாக இந்த கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே தமிழகத்தில் வலுவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தது புதிய தமிழகம். பின்னர்2009ல் மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக்குடன் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. தற்போது அதிமுக அணிக்கு அது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை தனது கூட்டணியை வலுவாக்கிக் கொள்ள ஜெயலலிதா தீவிரமாக உள்ளார். காங்கிரஸ், தேமுதிக ஆகிய இரு பெரிய மீன்களுக்காக காத்துள்ள அவர் இடையில் புதிய தமிழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளையும் தனது கூட்டணியில் சேர்க்கத் தொடங்கியுள்ளார்.
எம்.பிக்களுடன் ஜெ. ஆலோசனை
முன்னதாக நேற்று அதிமுக எம்.பிக்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். வருகிற 26ம் தேதி தொடங்கவுள்ள மழைக்காலக் கூட்டத் தொடரின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தின்போது ஜெயலலிதா, தனது கட்சி எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
போயஸ் கார்டனில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது திமுகவுக்கு நெருக்கடி தரக் கூடிய பிரசத்சினைகளை பெரிதுபடுத்திப் பேசுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
.
0 comments:
Post a Comment