December 01, 2009

கருணாநிதி அன்று முதல் இன்று வரை

நா கூசவில்லையா ?18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ?
புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன ?

1976ல் ஒரு சிறு குழுவாக துவங்கப் பட்ட புலிகள் இயக்கம், ஒரு பெரிய வளர்ந்த நாட்டுக்கு ஈடாக கடற்படை, வான்படை, தரைப்படை என்ற பெரும் ராணுவத்தை உருவாக்கி, 30 ஆண்டுகளாக சிங்களனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

புலிகள் சிங்களனின் பலத்தை சரியாகவே புரிந்து வைத்திருந்தனர்.

கருணாநிதியின் நயவஞ்சகத்தைத்தான் புலிகள் சரியாக புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.
சகோதர யுத்தத்தைப் பற்றிப் பேசுகிறாரே கருணாநிதி, கருணாநிதியின் வாழ்க்கை நெடுக சகோதர யுத்தத்தின் சுவடுகள் நிறைந்திருக்கின்றனவே ?

ஏன் மறந்து விட்டார் கருணாநிதி ?
1949 செப்டம்பர் 17ல் ராபின்சன் பூங்காவில் திமுக உருவெடுத்தபோது, கருணாநிதி இல்லையே ? அன்று ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்கள் அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத் மற்றும் என்.வி.நடராஜன் மட்டும் தானே.


மதியழகன், வி.பி.ராமன், ராஜாஜி மற்றும் அண்ணா


அன்று கருணாநிதி திமுகவிலேயே இல்லையே ! சில மாதங்கள் கழித்து, திமுக வின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டுப் பிறகுதானே சேர்ந்தார்.


1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அறிஞர் அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று அழைத்தது நாவலர் நெடுஞ்செழியனை அன்றோ ?கருணாநிதியைத் தன் வாரிசாக என்றுமே கருதியதில்லையே அண்ணா.
1967ல் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக பதவியேற்ற அறிஞர் அண்ணா 1969ல் மறைந்த பொழுது, இயல்பாக முதலமைச்சராக நெடுஞ்செழியன் அல்லவோ முதல்வராயிருக்க வேண்டும் ?

அண்ணா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முதலமைச்சர் பொறுப்பை 1969 பிப்ரவரி 3 அன்று ஏற்று ஏற்கனவே முதலமைச்சராக ஆகி விட்டாரே நெடுஞ்செழியன்.எம்.ஜி.ஆரின் உதவியோடு, எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று, சதித்திட்டத்தால் 1969 பிப்ரவரி 10ல் முதல்வரான கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?


திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திமுக துவக்கப் பட்டதும், பொதுச் செயலாளராக பதவியேற்ற அண்ணா தலைவர் பதவியை தந்தை பெரியாருக்காக காலியா வைத்திருந்திருந்தார்.

ஆனால், முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்ததற்கு கைமாறாக பொதுச் செயலாளர் பதவியை நெடுஞ்செழியனுக்கு அளித்து விட்டு, தந்தை பெரியாருக்காக காலியாக வைத்திருந்த பதவியை அபகரித்துக் கொண்டு, திமுகவின் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?


ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தது கருணாநிதி அல்லவா ?

அத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியவர் அல்லவா கருணாநிதி ?

எம்ஜிஆர் என்ற மனிதரின் புகழும், பிரச்சார பலமும் இல்லாவிட்டால் திமுக வென்றிருக்க முடியுமா ?

அதிமுகவை துவக்கிய பிறகு எம்ஜிஆர் இறக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே ?

அப்படிப்பட்ட எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய இவரா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?
1971ல் அண்ணாமலைப் பல்கலைகழகம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கு மாணவர்களின் எதிர்ப்பு பலமாய் கிளம்பியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் உதயக்குமார், திடீரென தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.

இதே கருணாநிதி தனது கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையை விட்டு, உதயக்குமாரின் பெற்றோரை மிரட்டி, அந்தப் பிணம் தங்களது மகனின் பிணமே அல்ல என்று சொல்ல வைத்தது இந்தக் கருணாநிதி அல்லவா ?

இவரா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?


1984ல் எம்ஜிஆர், உடல் நலம் குன்றி, அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது நடந்த பொதுத் தேர்தலில், “எனக்கு வாக்களியுங்கள், எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து வந்ததும், அவரிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைக்கிறேன்“ என்று கூறிய கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?

1975ல் நெருக்கடி நிலையை அறிவித்து, 1976 ஜனவரி 31ல் ஆட்சியை கலைத்து, சிறையில் தன் மகன் ஸ்டாலின் உட்பட கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய, கட்சித் தொண்டர் சிட்டிபாபு மரணத்துக்கு காரணமாக இருந்த, கருணாநிதியையும் கைது செய்து சிறையில் அடைத்த, தலைமறைவாக பல நாட்கள் சுற்ற வைத்த இந்திரா காந்தியோடு வெட்கமேயில்லாமல் கூட்டணி வைத்த கருணாநிதியா விடுதலைப் புலிகளைப் பற்றி விமர்சிப்பது ?தன்னுடைய மகனுக்குப் போட்டியாக வளர்கிறாரே என்ற ஒரே காரணத்துக்காக, “விடுதலைப் புலிகளோடு கூட்டு சேர்ந்து என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்“ என்ற அபாண்ட குற்றச் சாட்டை வைகோ மீது சுமத்தி 1993ல் திமுக விலிருந்து வைகோ வை வெளியேற்றிய இந்த கருணாநிதியா சகோதர யுத்தத்தைப் பற்றிப் பேசுவது ?


மற்ற நிகழ்ச்சிகளை விடுங்கள். தன் குடும்பத்தில் நடந்த உட்கட்சி சகோதர யுத்தங்களை தடுத்து நிறுத்தினாரா கருணாநிதி ?
2000 செப்டம்பர் 19 அன்று, அழகிரியோடு கட்சித் தொண்டர்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மதுரையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, 6க்கு மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப் பட்டனவே. தடுத்து நிறுத்தினாரா கருணாநிதி ?தா.கிருஷ்ணன்


கருணாநிதியின் மகன்கள் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.கிருஷ்ணனை கொலை செய்தது யார் ? அந்தக் கொலை வழக்கில், மொத்தம் உள்ள 88 அரசு சாட்சிகளில் 87 பேரை பிறழ் சாட்சிகளாக மாற்றி, அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்தது யார் ? இது சகோதர யுத்தம் இல்லையா ?

குடும்பத்துக்குள், மருமகன் வழி பேரன்கள் தன் மகனை இழித்து, கருத்துக் கணிப்பு வெளியிட்டு விட்டார்கள்என்ற ஒரே காரணத்துக்காக தினகரன் மதுரை அலுவலகத்தில் அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரை கொன்று அழித்தது யார் ?
இந்தக் கொலைக்குப் பிறகு சன் டிவிக்கு திடீரென்று அழகிரி “ரவுடியாக“ காட்சியளிக்கத் தொடங்கி இரு பிரிவினருக்கும் நடந்த போட்டியில், “அரசு கேபிள் கார்ப்பரேஷன்“ என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தில் திட்டம் துவக்கப் பட்டு, இன்று 150 கோடி கோடியை விழுங்கி விட்டு, அரசு கேபிள் கார்ப்பரேஷன் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறதே, இது சகோதர யுத்தம் இல்லையா ?
ரவுடித்தனம் செய்து, பல கொலைகளுக்கு காரணமான தனது மகன் அழகிரியைப் பற்றி, “பூச்சாண்டி பொம்மைகள்“ என்ற தலைப்பில் ஏப்ரல் மாதம் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி, என்ன கூறுகிறார் தெரியுமா ?அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."


ஒரு கொலைகார மகனை பெற்றெடுத்து, அவன் செய்யும் படுபாதகச் செயல்களுக்கெல்லாம், ஊக்கம் கொடுத்து மக்கள் வாயில் மண்ணைப் போடுகிறாரே கருணாநிதி, இது எந்த விதத்தில் நியாயம் ?


“இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும், நடத்திய அறப்போராட்டங்களும், சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளும், ஏன் இரு முறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களும்” என்று தன் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி.

1976ல் முதல் முறை கருணாநிதி ஆட்சியை இழக்கையில் பதவிக்காலம் முடிய சில மாதங்களே இருந்தன என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும், “விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தார்“ என்று நீதிபதி சர்க்காரியா பாராட்டும் அளவுக்கு ஊழல் புரிந்ததாலேயே கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டது.

மேலும், தன் மீதான ஊழல் புகார்கள் அனைத்தையும் கைவிட்டால் தான் கூட்டணி என்ற நிபந்தனை போட்டு, வெட்கமில்லாமல் இந்திரா காந்தியோடு கூட்டணி அமைத்தவர்தான் கருணாநிதி.


இரண்டாவது முறை ஆட்சியை இழந்த போது சுப்ரமணிய சுவாமி விரித்த சதியால் ஆட்சியை இழந்தார் கருணாநிதி. இலங்கை பிரச்சினைக்காகவா ஆட்சியை இழந்தார் கருணாநிதி ?


கருணாநிதிக்கு தன் குடும்பத்தை தவிர எதைப் பற்றியும் அக்கறை காட்டாதவர் என்பது உலகிறுகுத் தெரியாதா என்ன ?


வெறும் 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்ஷே வெற்றி பெற்றார் என்றும், 8 லட்சம் தமிழ் மக்கள் உள்ள நிலையில் விடுதலை புலிகள் தமிழ் மக்களை ஆதரித்து வாக்களிக்கச் செய்திருந்தால் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றிருப்பார் என்றும், விடுதலைப் புலிகள் பெரிய தவறை செய்து விட்டார்கள் என்றும் கூறுகிறார் கருணாநிதி.


தமிழ்நாட்டில் வசதியாக குளிரூட்டப் பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு,நடிகை ஸ்ரேயாவுடன் அரை குறை ஆடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு, இருக்கும் கருணாநிதிக்கு இலங்கையில் உள்ள கள நிலைமைகள் எப்படிப் புரியும் ?


போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்ட காலத்தில் புலிகளின் முக்கிய தளபதிகள் எத்தனை பேர் ரணில் விக்ரமசிங்கே அரசால் நயவஞ்சகமாக சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கிறார்கள் தெரியுமா ?


கருணாவை 1000 புலிகளோடு பிரிந்து போக முக்கிய காரணமாக விளங்கியது யார் என்று தெரியுமா ?


ஆங்கிலத்தில் Choice between the devil and deep sea என்று சொல்வார்கள். ஆழ் கடலுக்கும், சாத்தானுக்கும் இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் போல, ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ராஜபக்ஷேவுக்கும் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது ?

போர் நிறுத்த நேரத்தில், தந்திரமாகவும், நயவஞ்சகமாகவும், புலித் தளபதிகளை சுட்டுக் கொன்று, இயக்கத்தை பிளவு படுத்திய ரணில் விக்ரமசிங்கேவைத் தேர்ந்தெடுப்பதா, அல்லது புதியதாக ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பதா ?


புலிகளைப் பற்றிப் பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது ?

2009 ஜனவரி மாதமெல்லாம் இலங்கையில் கடும் குண்டு வீச்சு நடைபெற்று, அது புலிகளுக்கு எதிரான போராக அல்லாமல், அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலையாக மாறி ஈழம், பிணக்காடாக மாறியிருந்த நேரம்.


அப்போது, தை 1ஐ தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவித்ததற்கு கருணாநிதிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம்.

அப்போது அந்த விழாவில் பேசிய கருணாநிதி, “நேற்று, இந்த விழா அரங்கத்தை பார்வையிட வந்த போது, விழா ஏற்பாடுகள், உரிய நேரத்தில் முடிந்திடுமா, விழா சிறப்பாக நடந்திடுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால், இந்த விழாவை பார்க்கையில் என் தம்பிகள் ஜெகதரட்சகனும், துரைமுருகனும், அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்“ என்று கூறினார்.


மேலும் பேசிய கருணாநிதி “நான் இந்த விழாவில் முழு மகிழ்ச்சியோடு இருக்கிறேனா என்று நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. இங்கே நாம் தமிழுக்காக, தமிழை வளர்ப்பதற்காக விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, தாயகத்தில் வாழ முடியாமல் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிற காட்சியும் காண முடிகிறது. அவர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம். இன்னும் சிறப்பாக அவர்களை வாழ வைக்க என்ன செய்யப் போகிறோம். இந்த பிரச்சினைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க என்ன தான் செய்யப் போகிறோம்.


பாறையில் வெண்ணை உருண்டை ஓடி வர, அதனை
உருகாமல் காப்பாற்ற இரு கைகளும் இல்லாதவன் பாடுபடுவது போன்ற நிலையில் நாம் இருக்கிறோம். எனவே தான் சட்டசபையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்பதும் நமக்கு தெரியும். இந்த பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு இதில் தனது கடமையாற்ற வேண்டும்.

விரைவில் தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம் என்று கூறியிருக்கிறேன். அந்த பொதுக்குழு தீர்மானம் எப்படி
இருக்கும் என்று கூடி விவாதித்தால் தான் நீங்களும், நாட்டு மக்களும்,
இலங்கையில் இனப்படுகொலை செய்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

பிப்ரவரி 15-ந் தேதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி தமிழ் மக்கள் வாழ்வை எப்படி நிர்ணயிப்பது, எந்த வகையில் நிர்ணயிப்பது என்று முடிவெடுத்து அறிவிப்போம். நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை காப்பாற்றுவோம் என்பது தான் ”


கொத்துக் குண்டுகளுக்கு தமிழர்கள் இரையாகும் காட்சிகள், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும், அக்டோபர் 2008 முதல் தமிழகமெங்கும் வலம் வரத் துவங்கிய நிலையில், தனக்கு நடக்கும் பாராட்டு விழா ஏற்பாடுகள் சரியாக நடக்கின்றனவா என்று முதல் நாள் சென்று மேற்பார்வை செய்து விட்டு, மறு நாள் பாராட்டு விழா நடக்கையில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி இல்லை என்று “முதலைக் கண்ணீர்“ வடிக்கும் கருணாநிதி புலிகளைப் பற்றிப் பேசலாமா ?


ராஜபக்ஷேவும், பொன்சேகாவும், புலிகளோடு களத்தின் நின்று மோதினார்கள். ஆனால் சோனியாவும், கருணாநிதியும், நிழல் யுத்தம் நடத்தி, கடைசி வரை நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள் அல்லவா ?

கருணாநிதி பேசலாமா புலிகளைப் பற்றி ?


தன் மகனென்றும் பாராமல், வீரச் சமரிலே தன் மகனை தியாகம் செய்த பிரபாகரன் எங்கே,

பதவிக்காக சோனியா காலில் விழுந்து ஒரு ரவுடி மகனுக்கு மந்திரி பதவி பெற்றுத் தரும் கருணாநிதி எங்கே ?
பல குடும்பங்களை,. இனத்துக்காக போரில் தியாகம் செய்த புலிகள் இயக்கம் எங்கே,

தன் குடும்பத்துக்காக சுயமரியாதையை இழந்து, பதவிக்காக பிச்சை கேட்டு, தன்னை விட வயதும் அனுபவமும் குறைந்த ஒரு பெண்மணியின் காலில் தன்மானத்தை அடகு வைக்கும் கருணாநிதி எங்கே ?


மகன்களையும், மகள்களையும், சகோதர சகோதரிகளையும், கணவர்களையும், மனைவிகளையும் யுத்தத்தில் தியாகம் செய்து, வீரப் போர் புரிந்த புலிகள் இயக்கம் எங்கே,

ஊரை அடித்து உலையில் போட்டு, ஊரான் மனைவி தாலியை அறுத்து, பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துள்ள கருணாநிதி எங்கே ?


புலிகளின் பெயரை உச்சரிக்கவே கருணாநிதிக்கு நா கூச வேண்டும். இதில் புலிகளை விமர்சனம் செய்யலாமா ?நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பங் கொண்டே! கிளியே !
சிறுமை யடைவா ரடீ !

மகாகவி பாரதி


http://www.savukku.net/2009/12/blog-post.html நன்றி சவுக்கு...


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites