October 06, 2009

சென்னையில் 12-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதா நிதி வழங்குகிறார்

சென்னை, அக். 6-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தார். இதையடுத்து கடந்த மே மாதம் 28-ந் தேதி கொடநாடு சென்றார்.
தற்போது அங்குள்ள பங்களாவில் ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி நிர்வாகிகளையும் அங்கேயே சந்தித்து வருகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களும் அங்குதான் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அ.தி. மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு 45 தொழிலாளர்களுக்கு நிதி வழங்குகிறார்.
இதற்காக, ஜெயலலிதா இன்னும் ஒருசில நாட்களில் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருகிற 17-ந் தேதி அ.தி. மு.க.வின் 38-வது ஆண்டு தொடக்க விழா சென்னை அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடக்கிறது. இதிலும் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
அன்றைய தினம் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குகிறார். அ.தி.மு.க. வுக்காக பாடுபடும் ஏழை தொண்டர்களுக்கு நிதி உதவியும் வழங்குகிறார். கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கிறார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites