முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை முதலமைச்சர் கருணாநிதி தட்டிக்கேட்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு அதை தட்டிக்கேட்காததன் மூலம் கருணாநிதி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார் என்று கூறியுள்ளார்.
WD
இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத்திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ்நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர்காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை! கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஏற்கனவே இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், அதற்கு முற்றிலும் நேர்மாறான செயலை செய்ய மத்திய அரசு எப்படி முன் வந்தது? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு முறையிட்டதா? மத்திய அரசின் அனுமதிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டாமா?
மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி! தனக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!
நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி! அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது. முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதியால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment