October 05, 2009

பரமக்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 4: பரமக்குடியில் உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு மானியத் தொகை அளிக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 84 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள் அச்சங்கங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி மானியமான ரூ.11 கோடியே 55 லட்சத்தை தி.மு.க. அரசு அளிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலைக்கு நெசவுத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நெசவுத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. தனியார் இடத்தில் 10 சதவீதம் அதிகக் கூலி கிடைப்பதால், தொழிலாளர்கள் தனியாரிடத்தில் வேலை செய்ய ஆர்வம் காண்பிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால், கூட்டுறவு சங்கங்கள் நலிந்து போய்விடும் எனத் தகவல்கள் வருகின்றன. எனவே, நெசவாளர்களின் நலனைப் புறக்கணிக்கும் விதத்தில் செயல்படும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், சிறப்புத் தள்ளுபடி தொகை ரூ.11 கோடியே 55 லட்சத்தை உடன் வழங்கக் கோரியும், நெசவுத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சு. முத்துசாமி, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வ. சத்தியமூர்த்தி, பரமக்குடி நகரச் செயலாளர் எம்.கே. ஜமால் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites