பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., - ம.தி.மு.க., ஆகிய எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் நடத்தப்போவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இது குறித்து ஜெயலலிதா, வைகோ உள்பட 7 கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அந்த அறிக்கையில் : பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக்கொண்டே போனால், அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர்ந்து கெண்டே போகும். பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர, இந்த முறை மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைக்கேற்ப பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. டீசல் விலையையும் இதே பாணியில் உயர்த்திக் கொள்வதற்கான அறிவிப்பு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது . மத்திய அரசின் இது போன்ற அறிவிப்பின் காரணமாக சரக்குக் கட்டணம், லாரி, வேன் வாடகை, என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்படும் . பெட்ரோல், டீசல், காஸ். மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டிரைக் நடத்தயிருப்பதாக தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங் : பெட்ரோல் டீசல் விலையை சீரமைப்பது தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பெரிய விஷயமாக மக்கள் மத்தியில் எதிர்கட்சிகள் தூண்டி விடக்கூடாது என்றார். விரைவில் டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திட்டமும் அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.
.
.
0 comments:
Post a Comment