சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள் நம்பிக்கையை இழந்து, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்களை ஓட்டளிக்க விடாமல், குறுக்கு வழியில் வன்முறையாளர்கள் மூலம் தேர்தலை சந்திக்க ஆயுள் கைதிகளை விடுவித்துள்ளனர்' என்று, அப்போது கண்டனம் தெரிவித்தேன்.
இந்த குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தி.மு.க.,வினர்; இதில் மதுரை லீலாவதி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடங்குவர். இவர்கள் உள்ளாட்சி மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் தி.மு.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை.தற்போது, செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது; கோர்ட்டை அவமதிக்கும் செயல். வரும் சட்டசபைத் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, ஓட்டளிக்க விடாமல் ஜனநாயகப் படுகொலையை செய்யும் திட்டமோ, என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்க கூடாது என்பதற்காக, கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது, சட்டத்திற்குப் புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல். இதுபோன்று முன்கூட்டியே விடுவித்தால், கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்.
"மக்களாட்சியிலும் சில பல கேடுகளும், கொடுமைகளும் ஏற்பட்டு விடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும், போக்கிடும் வாய்ப்பும் மக்கட்கு கிடைக்கிறது' என்றார் அண்ணாதுரை. மக்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பான ஓட்டுரிமையிலும் மண் அள்ளிப் போடுவதா?இதுபோன்ற ஜனநாயக விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
0 comments:
Post a Comment