லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கொடநாடு சென்றார் ஜெயலலிதா. அங்கு சென்ற போதிலும் கூட ஓய்வுக்கு மத்தியிலும் தனது அரசியல் நடவடிக்கைகளை அவர் கைவிடவில்லை.
கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை ஊட்டியில் நடத்தினார். கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
பால் மாறிய பலரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார். குறிப்பாக தூத்துக்குடி ஸ்டிராங் மேன் என கருதப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனையும், அதிமுகவில் இருந்து கொண்டே திமுகவுக்கு சார்பாக பேசியும், நடந்தும் வந்த எஸ்.வி.சேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கினார்.
கட்சிக்குள் களையெடுப்பு நடத்தியது தவிர, ஒவ்வொரு ஊரின் மக்கள் பிரச்சினையை முன்வைத்து அதிமுக சார்பில் ஏராளமான போராட்டங்களை நடத்த உத்தரவிட்டார்.
கொடநாடு பயணத்தின்போது நடந்த சட்டசபை இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பு முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் தனது நிலையில் உறுதியாக இருந்தார் ஜெயலலிதா.
இடையில் எழுந்த பல்வேறு சலசலப்புகளையும் அவர் சாதுரியமாக அடக்கினார். குறிப்பாக ஓ.பன்னீர் செல்வம் திமுகவுக்குப் போகப் போகிறார் என்று வதந்திகள் எழுந்தபோது அவரே ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார். அத்துடன் நிற்காமல், பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓரணியில் திரண்டு சென்னையில் பெரும் போராட்டத்தையும் நடத்தினர்.
ஜெயலலிதாவின் இந்த பயணத்தின்போது அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பாமக கூட்டணியை விட்டு விலகியது. இதை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவர் எதுவும் பேசாமல் விட்டு விட்டதன் மூலம் வெளிக் காட்டினார்.
ஜெயலலிதா சென்னையில் இல்லாவிட்டாலும் கூட அவரைச் சுற்றித்தான் தமிழக அரசியல் சுழன்று வந்தது.
உலகத் தமிழ் மாநாடு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதும், அதைக் கண்டித்து ஜெயலலிதா அறிக்கை விட்டார். மேலும், இந்த மாநாடு எப்படி உலகத் தமிழ் மாநாடு ஆகும் என்றும் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். தற்போது உலகத் தமிழ் மாநாடு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
அதேபோல முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் போக்கை சாடினார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதைப் பாராட்டினார் ஜெயலலிதா.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியால், தனது தாய் மொழியில் லோக்சபா வில் பேச முடியாத அவல நிலை இருப்பதாக சாடிய அவர், அழகிரிக்கு ஆதரவாக பேசி அறிக்கை விட்டது திமுக தரப்பை நெளிய வைத்தது.
இப்படி பரபரப்பாக கழிந்த இந்த நான்கு மாத பயணத்திற்குப் பின்னர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பினார். அவரது வருகை, அதிமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா வந்தால் சும்மா இருக்க மாட்டார். நிச்சயம் அதிரடி பட்டாசு காத்திருக்கிறது என்கிறார்கள் உற்சாகத்துடன்.
பல கட்சிகள் இருந்தாலும், தலைவர்கள் இருந்தாலும் திமுகவுக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதாக இப்போதைக்கு உள்ள ஒரே கட்சி அதிமுகதான் என்பதால் ஜெயலலிதா வின் சென்னை வருகை, கட்சிக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்து புது வீச்சுடன் செயல்பட வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.